யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்

இலங்கையின் பழமைவாய்ந்ததும், வியாபார மற்றும் இராணுவ கேந்திர முக்கியத்துவமானதுமான பலாலி விமான நிலையம், தற்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மீண்டும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

பல அரசியல் இழுபறிகளின் பின்னர் ஒருவாறு சிங்கள அரசு பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மீண்டும் தரமுயர்த்துவதற்கு ஒப்புக்கொண்டிருந்தது. பெரும்பாலும் இந்திய அரசின் கடும் அழுத்தம் காரணமாகவே இது சாத்தியப்பட்டுள்ளதுபோலுள்ளது!

Jaffna International Airport

இலங்கை வரலாற்றில் அதிக உள்ளூர் பயணிகள் விமானத்தில் பயணம் மேற்கொள்ளவது யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே. ஒரு காலத்தில், மூன்று தனியார் விமான நிறுவனங்கள் பல விமான சேவைகளை கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கு இடையில் மேற்கொண்டிருந்தன.

அந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்துவதில் சிங்கள அரசு திட்டமிட்டு இழுத்தடித்து செய்து வந்தது.  நல்லாட்சி அரசு பதவியேற்றபின்னரும் அதே நிலமையே காணப்பட்டது.

நிமால் சிறிபால டிசில்வா போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது, மட்டக்களப்பு விமான நிலையத்தை புணரமைப்பது தொடர்பாக காட்டிய அக்கறை, பலாலி விமான நிலைய புணரமைப்பில் காட்டவில்லை.

ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னரே ஓரளவு தெரியவந்தது ஏன் சிங்கள அரசினால் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்று!!

தற்போது மிக மிக அவசரமாக பலாலி விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மீண்டும் தரமுயர்த்தப்பட்டு உலகத்திற்கு காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த நிகழ்வு அரசியல் நாடகத்தின் உச்சக்கட்டமாக பார்க்கப்படுகிறது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக வெற்றி பெற்றால், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்படலாம் அல்லது மட்டுப்படுத்தப்படலாம். சொல்லப்படும் காரணம் பாதுகாப்பு பிரச்சனை என்பதாக இருக்கும்.

ஏனெனில்,  மகிந்த அரசினால், சீன அரசின் உதவியுடன் உருவாக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையத்தில், நல்லாட்சி அரசு பதவியேற்ற சில காலங்களிலேயே நெல்லு காயப்போட்ட நிகழ்வு எல்லோருக்கும் நினைவிருக்கலாம். 

Latest articles

Similar articles