வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சி இறுதிப்படுத்தியுள்ளது.
கிடைக்கப்பெற்ற பல நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து, கட்சியின் தேர்தல் நியமனக் குழுவினால் சுமந்திரனின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் உறுப்பினர்களின் பெயர்கள் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தழிரசுக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் முதல் சான்றாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் ஊடகவியலாளர்களைக் கூட சந்திக்காமல் சினத்துடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், கட்சியின் கொழும்புக் கிளை பொறுப்பாளராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டதால், அவரும் தமிழரசுக் கட்சியில் இருந்து தான் முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் பல இளம் படித்த இளைஞர்களும், தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவை எதிர்த்து கட்சியில் இருந்து தாம் விலகுவதாக சமூக வலைத்தள்ங்களில் தெரிவித்து வருகின்றனர். (இவர்கள் எல்லோரும் வரும் பொதுத்தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை!!!!)
கடந்த 2020 பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரவிராஜின் மனைவியும் தனக்கு வேட்பு மனு கிடைக்காததால், தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் (சங்கு சின்னம்) இணைந்து இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தமிழரசுக் கட்சியின் இந்த முடிவிற்கு சுமந்திரன் ஒரு பிரதான காரணியாக இருக்கிறார் என்பது கட்சிக்காரர்களுக்குத் தெரிந்த போதும், அவரை எதிர்க்க முடியாத அளவிற்கு சுமந்திரன் கட்சிக்குள் தன்னைப் பலப்படுத்தியுள்ளார். கட்சியின் முன்னாள் தலைவர் சம்பந்தனின் மறைவிற்குப்பின்னர் இடம்பெறும் முதல் பொதுத்தேர்தலிலேயே கட்சிக்குள் பல பிரச்சனைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளது.
தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரனின் செல்வாக்குப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்ததால், ஏனைய தமிழ்க் கட்சிகளான புளொட், டெலோ, EPRLF, விக்கி அணி போன்றன முதலே தமிழரசுக் கட்சியினுடைய தொடர்புகளைத் துண்டித்து, தனித்தோ அல்லது கூட்டாகவோ இயங்க ஆரம்பித்துள்ளார்கள்.
“வீடு” சின்னத்திற்கு (மட்டும்) மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. இருப்பினும் சங்கு, சைக்கிள், EPDP, அங்கஜன் அணி, CV.விக்னேஸ்வரன் அணி என பலத்த சவால்களுக்கு அப்பால், ஜனாதிபதி அநுரவின் திசைகாட்டியின்(NPP) செல்வாக்கையும் வீடு (தமிழரசுக் கட்சி) சமாளிக்க வேண்டும்.
சுமந்திரனின் சகாக்களாக களமிறங்கும் வேட்பாளர்கள் படித்த, ஓரளவு செல்வாக்குடைய புதிய வேட்பாளர்களாக இருப்பினும், யாழ் மக்கள் மத்தியில் இவர்கள் தொடர்பான கருத்து/நிலைபாடு என்ன என்பதை வரும் நவம்பர் 15ம் திகதி நாம் அறிந்து கொள்ளலாம்.
யாழ் மாவட்ட தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் விபரம்
1-M.A.சுமந்திரன்
2-S.ஶ்ரீதரன்
3-E.ஆனோல்ட்
4-K.சயந்தன்
5-S.சுகிர்தன்
6-S.C.C.இளங்கோவன்
7-சுரேக்கா.S
8-கிருஷ்ணவேணி.S
9-T.பிரகாஷ்