தமிழரசுக் கட்சியின் வினோதமான வேட்பாளர் தெரிவு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் தாயகத்தில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவில் இடம்பெற்றுள்ள தமிழர்களுக்கு பரீட்சையமே இல்லாத, தமிழரின் அரசியல் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களைக் கொண்ட புது முகங்களைப் பார்க்கும்போது, வேட்பாளர் தெரிவு முறையாக இடம்பெறவில்லை எனபது மிகத்தெளிவாகத் தெரிகிறது.

தேர்தலில் வெற்றி பெற வாக்குகள் மட்டுமே தேவை. அதனால்தான் வாக்குகள் பெறக்கூடிய ஒருவரை படித்தவரா, படிக்காதவரா, நடத்தை கெட்டவரா, திருடனா, கொலையாளியா என எதையும் பார்க்காமல் கட்சிகள் தேர்தலில் நிறுத்தும். அந்த வேட்பாளரும் அதிக வாக்குகளைப் பெற்று கட்சிக்கு பெருமை சேர்ப்பார்.

ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கில் மட்டும் வினோதமான நிலை காணப்படுகிறது. அதாவது தமிழரசுக் கட்சி வீட்டு சின்னத்தில் யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ, அவரை மக்கள் தெரிவு செய்வாரகள் என்ற அதீத நம்பிக்கையில், வேட்பாளர் தெரிவு இடம்பெற்றுவருகிறது.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் பரீட்சையமே இல்லாத சுமந்திரன், C.V.விக்னேஸ்வரன் போன்றோரை தமிழரசுக் கட்சி தேர்தலில் நிறுத்தும்போது மக்களும் எதுவித கேள்விகளுமின்றி, கண்ணை மூடிக்கொண்டு வாக்களித்து தெரிவு செய்தனர். அதேபோல இம்முறையும் தாம் கைகாட்டும் புதிய வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என கட்சி தலமைப்பீடம் முழு நம்பிக்கை கொண்டுள்ளதுபோலும்.

மக்கள் பிரதிநிதி என்பவர் மக்களின் பிரச்சனைகளை அறிந்த, மக்கள் மத்தியில் சற்று பிரபலமானவராக, அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராக, இனமத பேதமற்றவராக இருக்க வேண்டும். மேலும் அந்த பிரதிநிதி ஒரு கட்சியைச் சேர்ந்தவரெனில், குறிப்பிட்ட சிலகாலம் கட்சியில் உறுப்பினராக இருந்து, கட்சியின் ஏற்ற இறக்கங்களைத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இப்படியான ஒருவரைத் தெரிவு செய்யும்போதுதான் மக்களின் பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வினைப் பெறமுடியும்.

ஆனால் தமிழரசுக் கட்சி மேற்குறித்த எதையுமே கருத்திற்கொள்ளாமல், உயர் மட்ட உறுப்பினர்களின் தன்னிச்சையான முடிவுகளுடன் புது முகங்களை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே கட்சி உறுப்பினர்களும், பல அமைப்புகளும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன. 

இவ்வாறான உறுப்பினர்களைத் தெரிவு செய்ய தமிழரசுக் கட்சித் தலமைப்பீடத்திற்கு அழுத்தங்களை கொடுத்தது யார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. 2009ம் ஆண்டு போர் முடிவிற்கு வந்த பின்னர் இன்றுவரை இலங்கை வாழ் தமிழர்களின் அரசியல் நிலை, மிகவும் ஒரு பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. கடந்த காலங்களில் பேரம் பேசும் பலம் இருந்தும் பேயர்களாக இருந்தது தமிழ் கூட்டமைப்பு. ரணில் விரித்த மாய வலையில் வீழ்ந்திருந்த கூட்டமைப்பு வாக்களித்த மக்களுக்கு என்ன செய்தது, முண்டுகொடுத்திருந்த ரணில் அரசிற்கு என்ன செய்தது என்பதை உலகமே அறியும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் தமது வாக்கினை எவ்வாறு பயன்படுத்தப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles