ரணிலிடம் மன்னிப்புக்கோரிய ஜனாதிபதி

இன்று(23/03) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவிடம் மன்னிப்புக் கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

“தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசுதான் காரணம்” என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் விசனமடைந்த ரணில் “இலங்கை சுதந்திரக் கட்சியின் வேண்டுகோளிற்கிணங்க நீங்கள் (ஜனாதிபதி) இந்தக் கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளீர்கள். அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா எமது பழைய நட்பின் காரணமாக, என்னை தவறாது இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். 

நாம் எல்லோரும் இங்கு கூடியிருப்பது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைப் பற்றியும், அதனால் ஏற்பட்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பற்றியும் விவாதிக்கவே. இது ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு விளையாடும் நேரமல்ல. இப்படியே நாம் மாறி மாறி பேசிக்கொண்டிருந்தால், இறுதியில் அது அரசர் விஜயன் காலத்தில்தான் சென்று முடியும்” என குறிப்பிட்டார்.

இதனை தெளிவாக அவதானித்த ஜனாதிபதி, சுதாரித்துக்கொண்டு “அவரின் உரை உங்களைப் புண்படுத்தியிருந்தால், தான் மன்னிப்புக் கேட்பதாக” ரணிலிடம் தெரிவித்தார்.

Latest articles

Similar articles