ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி

ஆஸ்திரேலியாவில் பேர்த் நகரில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கட்டுக்களையும் இழந்து 403 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மாலன் 140 ஓட்டங்களையும், பேர்ஸ்டாவ் 119 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சில், ஸ்ட்ராக் 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 662 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டதது. இதில் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி இரட்டைச் சதம் (239) பெற, M.மார்ஷ் அதிரடியாக ஆடி 181 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஆண்டர்சன் ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்தினார்.


(ஸ்டீவ் ஸ்மித் படம் : ESPNCricinfo)

இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு முகம் குடுக்க முடியாமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெறும் 218 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஹசெல்வூட் ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்றரீதியில் முன்னிலை வகிக்கின்றது. அத்துடன் இங்கிலாந்து அணியிடம் இருந்த ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இரட்டைச் சதமடித்த ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டார்.

நான்காவது போட்டி டிசம்பர் 26ம் திகதி முதல்ம் 30ம் திகதிவரை மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.

 

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles