நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கா தனக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரா தெரிவித்துள்ளனர்.
நேற்று (14/04) புது வருடத்தை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரினும், மனுஷவும் ரஞ்சன் ராமநாயக்காவை சிறையில் சென்று சந்தித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் தெரிவித்ததாவது, ரஞ்சன் ராமநாயக்கா அவர்களுக்கு இன்னும் ஆறு மாதங்களே சிறை தண்டனை உள்ளது. அதனை தான் அனுபவித்து விட்டு வெளியே வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் எனவும் ஹரின் பதிவிட்டுள்ளார்.
இன்று நாடு முழுவதும் ராஜபக்ச அரசை கடுமையாக எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் ராஜபக்ச சகோதர்களை ஆரம்பம் முதலே துணிவுடனும், உண்மையாகவும் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் எதிர்த்த ஒரே ஒரு மனிதன் ரஞ்சன் ராமநாயக்கா என்பதை இலங்கை மக்கள் அனைவரும் அறிவர்.
அதனை விரும்பாத ராஜபக்ச அரசாங்கம் ரஞ்சனை சிறையில் அடைத்து, உண்மையான பல பெருங் குற்றவாளிகளை சிறையிலிருந்து விடுவித்தமையும் அனைவரும் அறிந்ததே.
