யாழ்-திருச்சி விமான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும்! – (f)பிட்ஸ் எயார்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விரைவில் நேரடி விமான சேவை ஆரம்பிக்கும் திட்டம் இருப்பதாக (f)பிட்ஸ் எயார் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பீட்டர் ஹில் தெரிவித்துள்ளார்.

பயணிகளிடமிருந்து கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கு இலங்கையிலிருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கபடும் எனவும் அவர் திருச்சியில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

(f)பிட்ஸ் எயார் முதன்முதலாக வரும் டிசம்பர் மாதம் 8ம் திகதி கொழும்பு – திருச்சி இடையேயான விமான சேவையை ஆரம்பிக்கின்றது. வாரத்திற்கு மூன்று சேவைகளை கொழும்பு திருச்சியிடையே (f)பிட்ஸ் எயார் வழங்கவுள்ளது.

இந்திய அரசின் உதவியுடன் பல கோடி ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் (பலாலி விமான நிலையம்), விமான சேவைகள் எதுவும் இடம்பெறாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இது இலங்கை அரசின் ஒரு திட்டமிட்ட சதியாகவே நோக்கப்படுகிறது.

யாழ்-இந்தியா விமான சேவை தொடங்கப்பட்டால், தமிழர் தாயகம் அபிவிருத்தியடைந்துவிடும் என்ற காழ்ப்புணர்ச்சியில், சிங்கள பேரினவாத அரசு பலாலி விமான நிலையத்தை மூடி வைத்துள்ளது. சிங்கள அரசின் இந்த செயலை இந்திய அரசும் இதுவரை கண்டும் காணாமல் இருப்பதுதான் மாபெரும் வேடிக்கையாகும்.

Latest articles

Similar articles