1400 பேருக்கு மேல் தொழில் புரியும் கம்பஹா ஆடைத் தொழிற்சாலையில் பரவ ஆரம்பித்த கொரோனா, தற்போது 832 பேருக்கு தொற்றியுள்ளது.

ஒரு நாளில் மட்டும் 729 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை மற்றும் அறிகுறிகள் எதுவுமின்றி விரைவாக பலருக்கு வைரஸ் பரவியுள்ளமை போன்றவற்றால் இலங்கையின் சுகாதாரத் துறையினர் கடும் குழப்பத்தில் உள்ளனர். மேலும் நோய்த் தொற்றிற்கான மூலம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான விசாரனைகள் இராணுவத்தின் உதவியுடன் துரிதகதியில் இடம்பெற்று வருகிறது.

495 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலையுடன் தொடர்புபட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களாவர். இவர்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் இவர்கள் சென்று வந்த இடங்கள், சந்தித்த நபர்கள் போன்ற விபரங்களை அரச அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.

தடுமாறும் இலங்கை அரசு

நோய்த் தொற்றிற்கான மூலம் கண்டறியப்படாமை, மிக விரைவாக அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தொற்றுக்குள்ளானவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் இருக்கின்றமை போன்ற காரணத்தினால் இலங்கை அரசு பெரும் தடுமாற்றத்திற்குள்ளாகியுள்ளது.

ஏற்கனவே நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், நாட்டினை முற்றாக முடக்கவும் முடியாமல் இலங்கை அரசு ஒரு இக்கட்டான நிலையிலுள்ளது. எனினும் நிலமை மேலும் மோசமடையும் பட்சத்தில் நாடளாவியரீதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.