காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக 125 ஆண்டுகளாக நீடித்து வரும் வழக்கில் இன்று (16/02) இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் இறுதி தீர்ப்பில், 10 மாத இடைவெளியில் 192 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.ஆனால் தமிழக அரசு 264 டி.எம்.சி கேட்டு மேல் முறையீடு செய்திருந்தது. அதுகுறித்து இன்று வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 177 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஒரு மனதாக இந்தத் தீர்ப்பை வழங்குவதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியாது என்று கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக விவசாயிகளை மட்டுமின்றி அரசியல்வாதிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மேலும் மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகள் அனைத்தும் தேசிய சொத்துகள் என்று சுட்டிக்காட்டியிருக்கும் நீதிமன்றம், எந்த மாநிலமும் முழு உரிமை கோர முடியாது என்று தெரிவித்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles