இன்று (26/09) தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 33வது ஆண்டு நினைவு தினமாகும்.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, அகிம்சை வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த திலீபன், 12 நாட்கள் உணவு மட்டுமின்றி, நீர் கூட அருந்தாமல் 26/09/1987 அன்று வீரச்சாவைத் தழுவியிருந்தார்.
ஐந்து அம்ச கோரிக்கைகளாவன,
1) மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2) சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3) அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4) ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் தற்போது ஆட்சியிலுள்ள ராஜபக்ச அரசு சகல வழிகளிலும் திலீபனின் நினைவேந்தலுக்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளது. அகிம்சை வழியில் மரணித்த மாவீரனுக்கு அமைதி வழியில் கூட அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் இன்று தாயக தமிழ் மக்கள் உள்ளனர்.
பல தமிழ் அரசியல் கட்சிகள் நீதிமன்றத்தை நாடியபோதும், கொழும்பின் கடும் அழுத்தம் காரணமாக தீர்ப்பு சாதகமாக கிடைக்கப் பெறவில்லை.
