சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப மைத்திரியும், ரணிலும் பதவி விலக வேண்டும்

இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதிகளினால் பொதுமக்கள் மீது நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களை முறியடிக்கத் தவறிய இலங்கை ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டும். இதன் மூலமே சுபீட்சமான இலங்கையை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப முடியும்.

நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இருக்கிறார். விடுதலைப்புலிகளுடனான போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது பலமுறை பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர். அனுபவம் வாய்ந்தவர்.

ஆனால் துரதிஷ்டவசமாக பிரதமர் ரணிலுடன் ஏற்பட்டுள்ள ‘நீயா நானா’ போட்டியில் இலங்கையின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியுயள்ளதுடன், பொருளாதாரரீதியில் இலங்கையை மீண்டும் அதல பாதாளத்திற்கு தள்ளியுள்ளார்.

இதற்கு ரணிலும் பொறுப்பேற்கவேண்டும். பாதுகாப்பு ராஜாங்க அமைச்சு ஐ.தே.க வசமுள்ளது. ஆனால் தாக்குதல் தொடர்பாக எவ்வித தகவல்களும் பிரதமருக்கு போகவில்லை என்பது நம்பும்படியான ஒரு விடயமல்ல.

பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் தகவல்களை போகவிடாமல் புலனாய்வுப்பிரிவினரை இயக்கியது யார் என்பதே பெரும் கேள்வி. இப்படியான ஒரு சந்தர்ப்பத்தைத்தான் மகிந்த அணி சிறப்பாகவும், புத்திசாலித்தனத்துடனும் பாவித்து தமது அரசியலை நகர்த்தத் தொடங்கியுள்ளது.

“சிங்கள மக்களின் ஆதரவுடன் மட்டும் ஜனாதிபதியாவேன்” என்று கோத்தபாய சொல்லும்போதே ரணில் விழிப்படைந்திருக்க வேண்டும்.

அப்படிக் கூறிய கோத்தபாய சில நாட்களில் அமெரிக்கா சென்று (தனது அமெரிக்க குடியுரிமையை அகற்றுவதற்காக) நாடு திரும்புகிறார். மைத்திரியும் இந்தியா, சிங்கப்பூர் என வெளிநாட்டுப்பயணம் மேற்கொள்கிறார். ரணில் பெந்தோட்டை செல்கிறார், மகிந்த நுவரெலியா செல்கிறார், கொழும்பில் குண்டுகள் வெடிக்கிறது 😮😮

குண்டுகள் வெடித்து நாடே சோகத்தில் இருக்கும்போது ஐந்தாம் நாள் (26/04 மாலை) நான் ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன் என கோத்தபாய சர்வதேச ஊடகத்திற்கு சொல்கிறார். அத்துடன் இஸ்லாமிய பயங்கரவாதத்தை முற்றாக வேரறுப்பேன் எனவும் சூளுரைக்கிறார்.

பலர் நினைக்கலாம் அவர் ஜனாதிபதியாக வரலாம், ஆனால் பாராளுமன்றத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவின்றி அவரது கட்சி பெரும்பான்மை பெற முடியாதுதென்று.

இருப்பினும் இங்கு இரண்டு விடயங்களைக் கருத்திற்கொள்ளவேண்டும்.

ஓன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாரிய கறையை அகற்ற அவர்களுக்கு நிரந்தரமான, பாதுகாப்பான ஒரு சூழல் அமையவேண்டும். அதனை நான் ஏற்படுத்தித் தர முடியும் என கோத்தபாய வாக்குறுதி குடுத்தால், எல்லா முஸ்லிம் கட்சிகளும், கட்சி பேதமின்றி அவருடன் கைகோர்க்கும்.

இரண்டாவது, நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவர் எதுவும் செய்வார். சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற பலமிக்க நாடுகள் அவருக்கு துணை நிற்கும்.

ஆகவே தமிழ் கூட்டமைப்போ, இந்தியாவோ, மேற்குலக நாடுகளோ பெரிதாக ஒன்றுமே செய்ய முடியாத ஒரு நிலை ஏற்படும்.

குறுக்கியகாலத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் பலவீனப்படுத்தப்படும்.

அண்டை நாடான இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், கடும்போக்குடன் கோத்தபாய ஆட்சி நடத்தினாலும், இந்தியாவுடன் சுமூகமான உறவைப் பேணுவதில் எவ்வித தடங்கல்களும் இராது என்பது வெளிப்படையான ஒரு விடயம்.

இப்படியான ஒரு நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது ரணிலின் கைகளில்தான் இருக்கிறது.

ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்பட்டிருப்பதால் அவர் பதவி விலக மாட்டார். எனவே ரணில் தனது ஈகோவை விட்டுக்கொடுத்து, இன்னொருவரை பிரதமராக்கவேண்டும். புதிய பிரதமர் ஜனாதிபதியுடன் இணைந்து கட்டுக்கோப்பான ஒரு ஆட்சியை நடத்தி சுபீட்சமான ஒரு இலங்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்.

Latest articles

Similar articles