வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு விருப்பு எண்கள் வழங்கப்பட்டுள்ளது. பிரச்சாரப் பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.
தேசிய அரசியலில், சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சின்னம் தொலைபேசி) மிக சுறுசுறுப்புடன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தியும் (சின்னம் திசைகாட்டி) மிகுந்த நம்பிக்கையோடும், எதிர்பார்ப்புடனும், எப்படியாவது மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றிட வேண்டுமென்ற உற்சாகத்துடன் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது.
ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ் தேர்தல் மாவட்டத்தில், வழமைபோல் ஒற்றுமை இல்லாமலும், சுயநலத்துடனும் பல கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என பல திசைகளிலும் சிதறி, ஆகக் கூடியது 593,000 வாக்குகளை இலக்கு வைத்து, 396 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
தற்போது பாராளுமன்றில் யாழ் தேர்தல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஆசனங்களைக் கொண்டுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி (வீடு), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), EPDP, C.V.விக்னேஷ்வரன் மற்றும் அங்கஜன் அணி போன்ற செல்வாக்கு மிக்க கட்சிகள் இம்முறை தேர்தலில் பாரிய சவால்ளை எதிர்கொள்ளப் போவதுடன், சில ஆசனங்களை இழக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு!
தேசிய மக்கள் சக்தி (சின்னம் திசைகாட்டி) மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு 17 (சின்னம் ஊசி) போன்றவற்றிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மெது மெதுவாக உயர்ந்து செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
தேசிய மக்கள் சக்தியினருக்கு(NPP) நாடு முழுவதும் எழுந்துள்ள மக்கள் ஆதரவு பிரதான தமிழ்க் கட்சிகளை பாரிய அளவில் கலங்க வைத்துள்ளதை மறுப்பதற்கில்லை.
தேசிய மக்கள் சக்தி ஒரு சிங்களப் போக்கு சக்தி எனவும்,
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி ஒரு மாயை எனவும்,
அவர்களால் ஊழலை இல்லாமல் செய்ய முடிந்தாலும் தமிழருக்கான தீர்வினைத் தர முடியாது எனவும்,
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் தமிழினத்தின் கோடாரிக் காம்புகள் எனவும் கூறுமளவிற்கு தமிழ்க் கட்சிகள் கதிகலங்கிப் போய் உள்ளனர்.
சிங்கள மக்கள் 40,50 வருடங்களின் பின்னர், தமது எதிர்கால நலன் கருதி அரசியலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதாவது சிங்கள மக்கள் காலத்திற்கேற்ற வகையில் பொதுநலத்துடன் சிந்தித்து வாக்களித்துள்ளார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்காவிற்கு வாக்களிக்கவில்லை. தமிழர்களை அநுரவிற்கு வாக்களிக்க விடாமல் திசை திருப்பிய பாரம்பரிய தமிழ்க் கட்சிகள், வடக்கு கிழக்கு தமிழர்களை ஒரு அடி மட்டத்தில் வைத்திருப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள்.
வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுபவர்களும் தமிழர்களே என்பதை பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் உணரத் தயாராகவில்லை. இதற்கு அவர்களது ஈகோ ஒரு காரணமாக இருக்கலாம். அதிகம் செல்வாக்கு இல்லாத, படித்த, நேர்மையான, இளம் வேட்பாளர்களை அக்கட்சி இம்முறை தேர்தலில் நிறுத்தியுள்ளது. அவர்ளுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்பதினால், தமிழர்கள் எதையுமே இழந்து விடப்போவதில்லை. (இருந்தால்தானே இழப்பதற்கு) மேலும் சந்தர்ப்பம் வழங்காமல் நாம் யாரையும் எடை போடவும் முடியாது.
கடந்த பல தேர்தல்களில், பாரம்பரிய தமிழ்க் கட்சிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஆட் கடத்தல், கப்பம் பெற்றவர்கள் என பல முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கு தமிழர்கள் வாக்களித்த சந்தர்ப்பங்களும் உண்டு. இவற்றின் அடிப்படையில் போலித் தமிழ்த் தேசியம், தமிழருக்கான தீர்வு போன்ற மயக்கும் வாசகங்களுடன் வரும் வேட்பாளர்களைப் புறக்கணித்து, தமிழ் மக்கள் வரும் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.