தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனத்தை வவுனியாவில் போட்டியிட்டு தோல்வியுற்ற சத்தியலிங்கத்திற்கு வழங்க தமிழரசுக் கட்சி முடிவு செய்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இளையவர்களை உள்வாங்குவதாக தெரிவித்து போட்டியிட்ட தமிழரசுக் கட்சி, இறுதியில் தமக்கு விசுவாசமானவர்களை முன்னுரிமைப்படுத்தும் வகையில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட இளம் சட்டத்தரணி செ.டினேசன் சத்தியலிங்கத்தை விட 2,500 இற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தும், தமிழரசுக் கட்சி அவரைப் புறக்கணித்துள்ளது.
கடந்த 2020 பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவத்தை காப்பதற்காக தேசிய பட்டியல் ஆசனம் அந்த மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. அதே போன்று இம்முறை மன்னார் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவத்தை வழங்கியிருக்கலாம்.
தேசிய பட்டியல் விவகாரத்தில் தமிழ்க் கட்சிகள் மீண்டும் மீண்டும் பிழையான போக்கையே கையாண்டு வருகின்றன. 2020 தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர் செ.கஜேந்திரன் தேர்தலில் போட்டியிட்டு தோற்றிருந்தார். இருப்பினும் அவருக்கே தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான போக்கு அந்தந்த கட்சிகளுக்கு வாக்களித்த வாக்களர்களை ஏமாற்றும் அல்லது முட்டாள்கள் ஆக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.