“புலி வருது” நாடகம் தொடங்கியது

மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த நாளிலிருந்து எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயம் “புலி வருது” நாடகம்.

ஏனெனில் ‘புலி’ அல்லது ‘ஈழம்’ என்ற சொற்பதங்கள் இல்லாமல் மகிந்த அணியினரால் சிங்கள மக்களை ஆழ முடியாது.

சரியாக ஒரு மாதத்தின் பின்னர், மாவீரர் தினத்தை மையமாக வைத்து வவுணதீவில் இருந்து இந்த நாடகம் தொடங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள சோதனைச் சாவடியில் நின்ற அப்பாவி காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தி, இருவரைக் கொன்று “புலி வருது” நாடகத்தை ஆரம்பித்துள்ளனர் மகிந்த அணியினர். (இதில் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் தமிழராம்! இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்காக மகிந்தவின் தமிழ் கைக்கூலிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.)

அரச ஊடகம், காவல்துறை அதிகாரம் எல்லாமே இப்பபோது மகிந்தவின் கையில் உள்ளதால், அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதுவே செய்தி. அந்த செய்த்திகளையே எல்லா உள்ளூர், வெளியூர் ஊடகங்களும் (இணைய ஊடகங்கள் உட்பட) பிரசுரிப்பார்கள்.

அந்தவகையில், இன்று (01/12) முன்னாள் போராளி ஒருவர் கிளிநொச்சியில் சரணடைந்துள்ளாராம் (சரணடைய வைக்கப்பட்டுள்ளார்).
முன்னாள் போராளி ஒருவர் காவல்துறையினரை சுட நினைத்தால், சுட்டுப்போட்டு சரணடையும் எண்ணத்துடன் சுட்டிருக்கமாட்டார். அதுவும் 48 வயதான, நாலு பிள்ளைகளின் தந்தையான ஒரு முன்னாள் போராளி, சுடுகின்ற அளவிற்கு சென்றிருக்க மாட்டார் என சுயமாக சிந்திக்கும் திறனுள்ள எல்லோருக்கும் விளங்கும்.

மேலும் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறார் என்று கருணா சிங்கள பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். ‘முன்னாள் போராளிகள் துப்பாக்கி சூடு’, ‘பொட்டு அம்மான் உயிருடன் உள்ளார்’… இப்படி இன்னும் பல செய்திகள் வரும் வாரங்களில் வரும். மக்கள் அவதானத்துடன் செய்திகளை உள் வாங்கவேண்டும்.

எப்படியோ மட்டக்களப்பிற்கும், கிளிநொச்சிக்கும் புலி connection குடுத்து, மொத்த வடக்கு கிழக்கையும் மீண்டும் இருண்ட சூழலுக்குள் கொண்டுவரப்போகிறார்கள்.

இந்த ஒரு சம்பவத்தை வைத்தே பல வீதிச் சோதனை சாவடிகளை உருவாக்குவார்கள். சற்று சுமுகமாகவுள்ள சிங்கள-தமிழ் மக்களுக்கிடையேயான உறவில் ஒரு இடைவெளியை உருவாக்குவார்கள். சிங்கள மக்களுக்கு மேலும் புலிப் பூச்சாண்டி காட்டுவார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த நாடகம் எடுபடாது. ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

இப்படியான ஒரு சூழ்நிலையில் 2019 ஜனவரியில் தேர்தல் நடக்குமாயின், தாமரை மொட்டு முழுமையாக மலரும். அதற்குரிய முழுப்பொறுப்பையும் ரணிலே ஏற்கவேண்டும்.

Latest articles

Similar articles