வடக்கு கிழக்கின் பாரம்பரிய தமிழ் கட்சியான தமிழரசுக் கட்சிக்கு இம்முறை எட்டு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி எட்டு ஆசனங்களைப் பெற்றமை, அக்கட்சிக்கு ஒரு வகையில் வெற்றியே.
கட்சியின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்குப் பின்னர் சந்திக்கும் முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.
கடந்த காலங்களில் டெலோ, புளொட் மற்றும் சிறிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி, இம்முறை சுமந்திரனின் தலையீட்டினால் தனித்து களம் இறங்கியது. சுமந்திரன் மீதான உட்கட்சி மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி, தேசிய மக்கள் சக்தியின் பாரிய எழுச்சி மற்றும் வைத்தியர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழுவின் அதிரடியான பிரச்சாரங்கள் என பல பக்கத்தாலும் பல சவால்களை யாழ் தேர்தல் களத்தில் எதிர்கொண்டது தமிழரசுக் கட்சி.
இம்முறை தேர்தலில், யாழ் தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி முதன் முறையாக இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், வன்னி தேர்தல் மாவட்டத்தில் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யாழ் தேர்தல் மாவட்டத்தில் தேசியக் கட்சி ஒன்று மூன்று ஆசனங்களைப் பெற்றமையும் இதுவே முதல்முறையாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழரசுக் கட்சி ஆதரவளித்த சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் போட்டியிடாமல் விட்டிருந்தால் தமிழரசுக் கட்சிக்கு மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள் கிடைத்திருக்கலாம்!! ஐக்கிய மக்கள் சக்தி யாழ் மாவட்டத்தில் 15,276 வாக்குகளைப் பெற்றிருந்தமையும் இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டும்.
தேர்தல் மாவட்டம் | வாக்குகள் | ஆசனம் |
---|---|---|
யாழ்ப்பாணம் | 63,327 | 1 |
வன்னி | 29,711 | 1 |
திருகோணமலை | 34,168 | 1 |
மட்டக்களப்பு | 96,975 | 3 |
அம்பாறை | 33,632 | 1 |
தேசிய பட்டியல் | 1 | |
257,813 | 08 |