கடந்த 21ம் திகதி (21/09/24) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுர குமார திசாநாயாக்க பெருவெற்றி பெற்றார்.
2024 ஜனாதிபதி தேர்தலில், வடக்கு கிழக்கு வாக்குகள் நாலா பக்கமும் சிதறடிக்கப்பட்டன. தேர்தல் புறக்கணிப்பு ஒருபக்கம், சுயேட்சை வேட்பாளர்(சங்கு) ஒருபக்கம், தமிழரசுக் கட்சியின் ரணில்-சஜித்-சங்கு இழுபறி ஒருபக்கம் என மக்கள் நாலா பக்கமும் திசை திருப்பப்பட்டார்கள்.
வட மாகாணத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் இயலாமை மற்றும் ஒன்றுமையின்மையைப் பயன்படுத்தி, இந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாடுகள் தலையிட்டிருந்தமை வெளிப்படையாகவே தெரிந்தது. இலங்கை அதிபரை தெரிவு செய்யும் தேர்தலில், வடக்கு கிழக்கு மக்களின் சார்புடன் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு விடக்கூடாது என்பதில் வெளிநாட்டு சக்திகள் மிக கண்ணும் கருத்துமாக உள்ளன.
இலங்கையின் தேர்தல் காலங்களில், வேறு மாவட்டங்களில் இல்லாத வெளிச் சக்திகளின் அரசியல் தலையீடு வட மாகாணத்தில் மட்டும் மிக அதிகமாக உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த தலையீடு தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
“தமிழ் தேசியம்” , “தமிழருக்கான உரிமை”, “தமிழருக்கான தீர்வு” என்ற போலியான கோசத்துடன் தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களை, குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர். 2001ல் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டணியினாலேயே எதுவும் செய்ய முடியாதபோது, இன்று சுக்கு நூறாக உடைந்து போயுள்ள தமிழ் அரசியல் கட்சிகளால் எந்தவொரு தீர்வையோ, நன்மைகளையோ தமிழருக்கு பெற்றுத் தரமுடியாது என்பது 100% திண்ணம்.
வரும் நவம்பர் 14ம் திகதி (14/11/24) இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், வடக்கு கிழக்கு மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அனைத்து பழைய பாராளுமன்ற உறுப்பினர்களையும் முற்றாக புறக்கணித்து, தேசிய அரசியலுக்கு நிகராக தமிழர்களின் வாக்குப்பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.
பல தசாப்தங்களாக நாம் ஆதரித்த தமிழர் தரப்புகளால் எதுவுமே மக்களுக்கு செய்ய முடியாமல் போயுள்ளமை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்தும் நாம் ஏமாறாமல், வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவர்கள் அனைவரையும் நாம் முற்றாகப் புறக்கணித்தாலும் எவ்வித இழப்பும் நமக்கு ஏற்படப்போவதில்லை என்பதும் மறுக்க முடியாத நிதர்சனமாகும்.