நேற்று (16/11) இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபாய ராஜபக்ச வட இலங்கையில் பெரிதாக வாக்குகளைப் பெற முடியவில்லை. இவருக்கு ஆதரவாக EPDP, பொதுஜன பெரமுனவின் யாழ் அணி மற்றும் அங்கஜன் அணியினர் கடுமையான தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.
யாழ் பாராளுமன்ற உறுப்பினர்களான EPDP தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை சுதந்திரக் கட்சியின் அங்கஜன் ஆகியோர் நேரடியாக களத்தில் இறங்கி பரவலான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தபோதும் மக்களின் மனங்களை வெல்ல முடியவில்லை.
2015 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ் மாவட்டத்தில் மகிந்தவிற்காக பிரச்சாரம் செய்த டக்ளஸ் தேவானந்தவினால் 74,454 வாக்குகளை பெற முடிந்திருந்தது. இருப்பினும் 2019இல் பெரும் அணியாக (டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் மற்றும் பொதுஜன பெரமுன யாழ் அணி) செயற்பட்டும் இவர்களால் வெறும் 23,261 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இதேவேளை வன்னி மாவட்டங்களில் கடந்த 2015 இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த 34,377 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் இம்முறை கோத்தபாய ராஜபக்சவினால் 26,105 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

மேற்குறித்த நிகழ்வுகள் EPDP, பொதுஜன பெரமுன மற்றும் அங்கஜன் அணியை வடபகுதி மக்கள் முற்றாகப் புறக்கணித்துள்ளார்கள் என்பதை மிகத்தெளிவாகக் காட்டுகிறது.