வீடும் வீணையும்

கடந்த உள்ளூராட்சி தேர்தலின்போது வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (வீடு), தமிழ் தேசிய மக்கள் முன்னணி (சைக்கிள்), ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி/வீணை) போன்ற தமிழ் அமைப்புக்கள் பெரும்பாலான வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் எந்த ஒரு சபையிலும் அவர்களால் தனித்து ஆட்சி அமைக்கும் நிலையைப் பெற்றிருக்க முடியவில்லை.

இதனால் பெரும்பாலான சபைகளில் ஈபிடிபியின் ஆதரவுடன் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைப்பு/தவிசாளர் தெரிவு செய்திகளை மட்டும் சில உள்ளூர் பத்திரிகைகளும், சில இணைய ஊடகங்களும் எதோ கூட்டமைப்பு தனித்து சபைகளைக் கைப்பற்றியதுபோன்று செய்தி வெளியிட்டிருந்தன.

தேர்தல் என்றால் வீட்டிற்குதான் தமது வாக்கு என்பவர்களில் பலர் (பெரும்பாலும் 50,55 வயதிற்கு மேற்பட்டவர்கள்) தமது வாக்குகளை வீட்டிற்கு வழங்கியிருந்தனர்.

பெரும்பாலான இளவயதுக்காரர்கள், மாணவர்கள், முதல்வர் விக்னேஸ்வரனின் ஆதரவாளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் பலர் சைக்கிளுக்கு வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலில் சைக்கிளின் வாக்கு வாங்கி கணிசமாக உயர்ந்துள்ளது. இதை தக்க வைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிக கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இம்முறை தேர்தலில், குறைந்த பிரச்சார நடவடிக்கைகளுடன், உண்மையான வாக்குகளை மட்டும் பெற்று (கள்ள ஓட்டு போடாமல்), வீட்டிற்கும், சைக்கிளுக்கும் சவால் விடும் வகையில் வீணையின் (ஈபிடிபி) பல உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர். வீணைக்கு கிடைத்த பெரும்பாலான வாக்குகள், அக்கட்சியின் மூலம் தொழில்வாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் கூட்டமைப்பின் செயற்பாட்டில் சலிப்புற்றவர்களாலும் கிடைக்கப்பெற்றதாகும். வெளிப்படையாகக் கூறின் வாழ்வாதாரத்திற்கு தேவையான தொழில் துறைகளை வழங்கியதற்காக, மக்கள் நன்றியுடன் ஈபிடிபிக்கு வாக்களித்துள்ளனர்.

எவரும் தனித்து ஆட்சி அமைக்க முடியாமல் போனதால், தமிழரசுக்கட்சியின் உயர்பீடம் ஈபிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முடிவிற்கு வந்தது. கட்சியின் உயர் மட்டத்தினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுக்களை தொலைபேசியூடாக நடத்தி, ஆட்சி அமைக்க ஆதரவைப்பெற்றுள்ளனர். அதன்படி பெரும்பாலான சபைகளில் கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது.

தமிழரசுக்கட்சி ஈபிடிபியுடன் இணைத்து ஆட்சி அமைக்க இந்திய கொள்கை வகுப்பாளர்களின் அழுத்தம் காரணமாக இருந்திருக்கலாம். இதற்கு நல்லாட்சி அரசும் துணை போயிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில், வீடும் வீணையும் இணைந்தால் சைக்கிள் ஓட முடியாமல் போகும், அதாவது தமிழ் தேசிய மக்கள் முன்னணி வினைத்திறன் அற்றதாகிவிடும் என்பதுதான் அவர்களின் (கொள்கை வகுப்பாளர்களின்) கணக்காக இருந்திருக்கும்.

இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் வட மாகாண சபை தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமிருந்து பலத்த போட்டியை எதிர்கொள்ளும். இப்பொழுதிலிருந்தே வீடு வீணையுடன் சேர்ந்து பயணித்தால், மாகாண சபை தேர்தலிலும் சைக்கிளை ஓரம் கட்டலாம் என்பதுதான் உள் நோக்கம்.

எது எவ்வாறு இருப்பினும் கடந்தகால தேர்தல்களில் வட மாகாண மக்கள் வீட்டிற்கு அளித்து வந்த ஆதரவு அலை, வரும் காலங்களில் சைக்கிளின் பக்கம் திரும்ப சாத்தியங்கள் அதிகமுண்டு.

இதனால் கூட்டமைப்பும் எந்த கட்சியுடனும் கூட்டு வைக்கவும் சாத்தியங்கள் அதிகமுண்டு.

Latest articles

Similar articles