இனவாத கட்சி உறுப்பினர்களின் வெடுக்குநாறி மலை விஜயம்

இலங்கையில் கடும் இனவாத கருத்துக்களை பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் தெரிவித்து வரும் விமல் வீரவன்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி, வட மாகாணத்தில் உள்ள குமுளமுனை குருந்தூர் மலை மற்றும் நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கு விஜயம் செய்துள்ளனர்.

இவர்களுடன் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வந்துள்ளனர்.

மஹிந்த ஆட்சிக் காலத்தில், கோத்தபாயவின் ஏகோபித்த ஆதரவுடன் கடும் இனவாத கருத்துக்களைத் தெரிவித்து வந்த விமல் வீரவன்சவால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி ஏன்  குருந்தூர் மலைக்கும், வெடுக்குநாறி மலைக்கும் செல்ல வேண்டும்?

முதலில் சாதாரண ஒரு பிக்கு புத்தர் சிலையுடன் வந்தார். மக்களின் கடும் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள், அமைதியுடன் திரும்பிப் போனார்கள்.

(அந்த நேரமே புதினம் செய்தித் சேவை குறிப்பிட்டிருந்தது, இனவாதிகளின் இந்த முயற்சி தொடர் கதையாக இருக்குமென்றும்.)

பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத் தொடுத்து மீண்டும் சிலை வைக்கும் முயற்சியை சட்டரீதியாக செய்ய மிகவும் வினைத்திறனுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

நேர்மை, நீதி, சட்டம் பேசும் தமிழர் தரப்பு (பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர்) இந்த விடயத்தில் எவ்வித கரிசனையுமின்றி இருக்கின்றது.

இந்த நேரத்தில் கடும்போக்குடைய தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களின் வருகை, அடுத்து நடக்க இருக்கும் இனவாத அரசியல் மற்றும்  பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது.

இன்னும் சிறிது காலத்தில், விமல் வீரவன்சவுடன் கோத்தபாய ராஜபக்ச குருந்தூர் மலைக்கும், வெடுக்குநாறி மலைக்கும் விஜயம் செய்வார். கோத்தபாயவின் விஜயத்தின் பின்னர் இந்த விடயம் தேசிய அளவில் சூடுபிடிக்கும்.

2020 தேர்தல் பிரசாரத்தில் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை விடயம் ஒரு முக்கிய விடயமாக இருக்கும்.

 

ஒருவேளை 2020 தேர்தலில் கோத்தபாய போட்டியிட்டு வெற்றி பெற்றால், குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை பிரதேசங்கள் மட்டுமின்றி, கிளிநொச்சி, மாங்குளம், மன்னார் மற்றும் பல இடங்களில் பௌத்த விகாரைகள் அமைவதுமட்டுமின்றி, சிங்கள குடியேற்றங்களும் உருவாக்கப்படும் என்பது திண்ணம்.

தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து
Loading...