யாழ் பல்க்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று (8/1/21) இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்தழிக்கப்பட்டது.
2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்களை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியையே இலங்கை அரசின் உத்தரவிற்கமைய, துணைவேந்தரின் வழிநடத்தலில் இடித்தழிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களை உளரீதியில் சீண்டிப் பார்க்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைபோயுள்ளமை மாணவர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் மத்தியில் கடும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு மற்றும் பாதுகாப்பு படையினரின் தொடர் அழுத்தம் காரணமாகவே நினைவுத்தூபி அகற்றப்பட்டதாக துணைவேந்தர் சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.
நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துவரும் அதேவேளை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் பாரத பிரதமர் மோடி இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

