காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்

இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள பிரதமர் மகிந்தவிற்கு கண்டனம் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

மட்டுவில் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்க, பிரதமர் வருகை தரும் வீதியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலிருந்து பேருந்துகளில் வந்த தாய்மார்களை, பேருந்தில் இருந்து இறங்க காவல்துறையினரால் அனுமதிக்கப்படவில்லை. 

இருப்பினும் பின்னர் அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி எதிர்ப்புத் தெரிவிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்து. பல தாய்மார் வீதியில் குறுக்காகப் படுத்து, அழுது புரண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். சிலர் பிரதமரின் பதாகைகளையும் எரித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இறுதிப்போர் முடிந்து 13 வருடங்கள் ஆகின்றபோதிலும், இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தொடர்பாக இதுவரை எவ்வித தகவல்களும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவராலும் கைவிடப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், நீதி கிடைக்காமல் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மட்டுவில் விழாவில் உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ச, போரில் இறந்த உறவுகளைத் தவிர மற்றைய அனைத்தையும் தான் மீளப் பெற்றுக்கொடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles