இன்று (01/04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் குழப்பம் ஏற்படுத்திய அரசின் கைக்கூலிகளை, யாழ் காவல்துறையினர் பாதுகாப்பாக முச்சக்கரவண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.
நாட்டில் தற்போது உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிக்கும், அரசின் பொறுப்பற்ற செயற்பாட்டினையும் கண்டித்து ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் யாழ் கச்சேரியில் ஆரம்பித்து, மத்திய பேருந்து நிலையம்வரை பேரணி இடம்பெற்றது. பேரணியின்போது மக்கள் அரசிற்கும், ஜனாதிபதிக்கும் எதிராக குரல் எழுப்பினர்.

இந்த பேரணியின் இறுதிநேரத்தில் அரசிற்கு ஆதரவான சிலரால் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. யாழில் அரசின் கைக்கூலியாக செயற்படும் அருண் சித்தார்த்தின் தலைமையில் ஒரு சிலர் அரசிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பிற்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டு, சிறிய அளவில் கைகலப்பும் ஏற்பட்டது.
மக்களின் கடும் கோபத்தை உணர்ந்த யாழ் காவல்துறையினர், அரசின் கைக்கூலிகளை பாதுகாப்பாக முச்சக்கரவண்டியில் அகற்ற முற்பட்டனர். இருப்பினும் மக்கள் முச்சக்கரவண்டியையும் முற்றுகையிட கடும் பிரயத்தனத்தின் மத்தியில் காவல்துறையினர் அவர்களை மக்களிடம் இருந்து பாதுகாத்து அனுப்பி வைத்தனர்.
மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, அரச கைக்கூலிகளைப் பாதுகாக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை இன்று எமது மண்ணில் ஏற்பட்டுள்ளது.

