வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (11/01/21) பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்படமையைக் கண்டித்து இந்த ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என்பன முழுமையான ஆதரவினைத் தெரிவித்துள்ளன.

வழமைபோல் இராணுவத்தினர் அல்லது காவல்துறையினர் வர்த்தகர்களை மிரட்டி கடைகளைத் திறக்க முயற்சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டதைப் போன்றே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள இனவாத அரசு மறைமுகமாக தமிழருக்கெதிராக பல வேலைத்திட்டங்களை, தமிழர்களை வைத்தே முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தினூடாக நிலங்களை கையகப்படுத்தல், தென் பகுதி மீனவர்களை வடக்கில் மீன்பிடிக்க அனுமதித்தல், தமிழரின் நினைவுச் சின்னங்கள், சுவடுகளை அழித்தல் போன்றவை அவற்றுள் சிலவாகும்.

மேற்படி நிகழ்வுகள் ரணில்-மைத்திரியின் நல்லாட்சி காலத்திலிருந்தே இடம்பெற்று வருகிறது. நல்லாட்சி அரசிற்கு முண்டுகொடுத்துகொண்டிருந்த தமிழ் கூட்டமைப்பு எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பிரபலமானவை